10.30.2013

தாய் தந்தை மகள்


தந்தை 


கலவிக்கு பின் கருவாகி 
கருவறையில் சிசுவாகி 
மகளாக பிறந்ததும் 
எப்படி தாயானாய் !

தாய் 


கணிக்க முடியாத இறைவனின் அன்பை 
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம் 
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு 
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !


மகள் 


திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும் 
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ 
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும் 
போய்விடும் -அதுவரை உங்கள் 
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில் 
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என் 
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !

முற்றும் -------------------------

நன்றி ... இதுவும் மீள் பதிவு . 

10.24.2013

கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும்


அழைப்பிதழ் -அவளுக்கு மறுமணம்!!!கல்யாணம் ஆயிரம் காலத்து பயிரென்றால் 
விவாகரத்து தான் அறுவடை நாளோ ?
நம் அறுவடை நாளில் உனக்கு 
தீபாவளி கொண்டாட்டம் !- நான் 
நரகாசுரன் ஆனதை எண்ணித்தான்  நொந்தேன் !நமக்குள் ஒத்து போகாததால் 
நம் காலம் ஒத்திகையாகிவிட்டது !
போகிற போக்கில் இன்று 
உன் திருமண அழைப்பிதழ் கண்டு 
கண்கள் ஏனோ பனித்தன 
இறுதியாய் ஒருமுறை மன்னித்து விடு !அழைப்பிதழ் தருவாய் என எதிர்பார்ப்பு ஏதுமில்லை !
தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே  !
ஆம் இனி உன் நினைவுகளை அசை 
போடுவது கூட அநாகரிகம் அல்லவா !


உன் காதில் விழாது என்றாலும் 
நம் அத்தியாயத்தின் முடிவுரை 
எழுதுகிறேன் இருவரும் பயன்பெற 
கேளடி தோழியே !

நீயும் நானும் சரிநிகர் சமானம் 
என்பதை நம் தவறுகள் தானே உணர்த்தியது !
உணர்ந்தாயா என் பார்வையில் நீயும் 
உன் பார்வையில் நானும் குற்றவாளிகள் என்பதை !

புதிய பாதையில் நீ செல்லும் போது 
கவனிக்க வேண்டிய பலகைகள் உண்டு !
முற்று புள்ளிக்கு முன் அதில் சில இதோ ....

எதிர்வாதத்திற்கு அணை போடு 
பிடிவாதத்தை களையெடு 
அன்பு கலை கணக்கின்றி பழகு !
நித்தமும் காதலை நிருபணம் செய் !

தொட்டதும் துலங்கிடும் வரம் 
யாருக்கும் கிடைத்ததில்லை 
தோல்விகளில் சிறகடித்தால் தான் 
சிகரம் தொடமுடியும் !
எனவே பொறுமையும் பழகு!


கட்டிலுக்கு கூட பொம்மைகள் போதும் 
என்னும் காலம் இது -எனவே அவனுக்கு 
புது கவிதையாக பொக்கிஷமாக இரு !
பாதுகாக்க அல்ல ஆராதிக்கவே அழகு  !என்னால் உனக்கு ஏற்பட்ட 
காயங்களுக்கு இனி மன்னிப்பு எதற்கு ?
ஆயினும் நான் அதில் பாடம் கற்கிறேன் 
இனி எனக்கும் ஒருத்தி விளக்காய் வரலாம் 
அவளுக்கு எரிபொருளாய் இதயம் தந்திடவே !
எனவே நன்றிகளோடும் வாழ்த்துகளோடும் 
உன் திசை மறந்து ,புதிய திசை நோக்கி ........!


இது ஒரு மீள் பதிவு நன்றி 


10.20.2013

ஒளி காட்டும் வழி ...........நிறம் அறியாதவன் நான் !
தமிழும் தொட்டு பார்த்து படித்தவன் !
முள்ளையும் ரோஜாவையும் பிரித்து
பார்த்ததில்லை ,ஆகையால் ரோஜாவை
முழுமையாக ரசித்த முதல் ரசிகன் நான் !

நானும் அம்மலர் போன்றவளே
என்னையும் அவ்வாறே ரசிப்பாயா ?!
என்ற கேள்வியோடு காதல் சொன்னாள்
அவளே பின்னாளில் என் மனைவியானாள் !

தாயின் நிராகரிப்பை கடந்துவந்த எனக்கு
தன் கண்மூடித்தனமான காதலால்
என் பாதைகளை அழகாக்கினாள் !

சாலையை கடக்க பல கைகள் உதவியதுண்டு
அவற்றில் பலரிடம் கருணையுடன்
சங்கடமும் ஒளிந்திருக்கும் -அவளால்
மட்டும் எப்படி எனக்கு காதலை
கலப்படமின்றி பரிசாக தரமுடிந்ததோ ?!

அழகின் வடிவும், அன்பின் உருவும் அவளே!
அவள் மட்டுமே !என்னுள் நிறைந்திருப்பதால்
ஆண்களில் இராமன் இல்லை என்ற
நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டேன் !-

ரோஜா மலர் போன்றதே எம் வாழ்க்கையும்
அதை முழுமையாக ரசிக்க வழிகாட்டும்
காதலே என்றும் எங்களுக்கு
 ஒளி காட்டும் வழி .!!

-ரியாஸ்