1.08.2013

விஸ்வரூபம் விஷபரிட்சையே !



பழக்கம் இல்லாத சப்தம் ,திடுக்கிட்டு திரும்பினால்
பீதியில் அலறி ஓடும்  மக்கள் ஒருப்பக்கம்
குருதிபுனலில் கதறும் மக்கள் ஒருப்பக்கம்
இல்லாத வீரத்தை தேடாமல்
இருக்கின்ற ஈரத்தினால் கதருவோருக்கு
உதவ நாடியது மனம் !

இது மனிதகூட்டத்தின் எரிமலை கோபம்
இயலாமையால் இன்று வெடித்துள்ளது
இன்னும் வெடிக்கும் என்ற அச்சத்தால்  பல
தோழமை கைகள் தடுக்கின்றன உதவிடும் என்னை !

அங்கே ரத்த வெள்ளத்தில் மிதப்பதும் நண்பர்களே

பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லும் போது 
கண்டகாட்சிகள் பலவற்றை கண்ணீர்
 மறைத்துவிட்டதால் கண்ணீருக்கு நன்றி! 
எஞ்சிய  சில மனக்கண்ணில் நிலைத்ததே சாபம்!

பால்வாங்க வந்த பெரியவர்,

பால்குடி மறக்காத குழந்தை, 
தாயின் அணைப்பில் இருந்ததற்கு 
சாட்சியாய் தாயின் கைமட்டும் 
குழந்தையோடு இருக்க -தாய் 
எங்கோ சின்னாபின்னமாகி! 
அனைவருக்கும் பால் ஊற்ற கூட 
பிரோயோஜன படாததால்  பால் பாக்கெட்டும்
உயிரிழந்து கொண்டிருக்கு!

இன்னும் உயிர் உள்ளவர்களுக்கு உதவிட

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு நான்
சிவப்பு விளக்குகளுடன் அம்புலன்சுகள்
சீறி பாயுந்து சென்றதும் வீதியில்
பிணமானவர்களும் உதவியவர்களும்
மட்டுமே இருக்கிறோம் !

ஜாதி மத பேதங்கள் தொலைந்து
ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
வழிந்து ஓடும் குருதிப்புனலில்
குருதி பேதமும் தொலைத்திருந்தது!


நடக்கையில் எறும்புகளை மிதித்து
கொன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு .
இது எறும்புகளின் கோவமோ ?!
புத்தனுக்கும் கோபம் வரும்
காலம் இது -என் சந்தேகத்தில் பிழையில்லை !

சமர்பிக்க சொல்லும் இறைவனிடம்
சமர்ப்பித்து இருந்தால் சங்கடங்கள் தீரும்!
பொறுமையின்றி உயிரெடுத்து கொன்றுகுவித்து
யாருக்கு நீதியை நிலைநாட்ட போகிறார்கள்
இந்த ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
 விஸ்வரூபம் விஷபரிட்சையே !

என் கருப்பு சட்டையிலும் செங்குருதி
திட்டு திட்டாய் தெரிவதை பார்த்து நொந்த
அதே கணம் மீண்டும் ,
அதே சப்தம் கேட்டது.-இந்த முறை
எனக்கு உதவிட அழைக்க யாருமில்லை !


தீப்பிடித்து எறியும் சட்டையையும்
அணைக்க வலுவில்லாமல் நான் !
ஐயோ சற்றுமுன்  காலிழந்த ஆடவனின் 
முகம் போல் என் முகமும் 
சிதைந்திருக்குமோ -எங்கே வலிக்கிறது 
கூறிப்பிட்டு சொல்ல வலுவின்றி 
மயக்க நிலைக்கு செல்கிறேன்!
மிருகங்களுக்கு நடுவில் மனிதனாக
இருக்கத்தானே முயற்சிதேன் எனக்கேன்
இந்த தண்டனை இறைவா ?

இல்லை!சரியே !கண்ட காட்சிகள்
சாபம் என்றேன் சாகும் வரம் தந்துவிட்டாய்
நன்றிகள் கோடி பரம்பொருளே !
வலிதான் பொறுக்க முடியவில்லை
சீக்கிரம் முற்றுப்புள்ளி வை
எனக்கும், நடக்கும் அத்தனை போருக்கும் !


-----------------
இதுவும் மீள் பதிவே ....

வலைச்சரத்தில்
இன்று :2517.சிகரெட்டும் சின்சியாரிட்டியும்

நேற்று :2516.சூரியனுக்கு எதுக்கு டார்ச் லைட் !!


29 comments:

  1. அருமை. மிகவும் அருமை. வரிக்கு வரி தீயினால் ஏற்பட்ட துன்பத்தையும் [ரஸித்துப் பார்த்து] அதன் வலியினை உணர்ந்து கொண்டேன்.

    >>>>>

    ReplyDelete
  2. தீவிர வாதமும் குண்டு வெடிப்புக்களும் தீக்காயங்களும் மறைந்து மனித நேயம் எங்கும் மலரும் நாள் எப்போதோ என ஏங்க வைக்கும் மிக நல்ல படைப்பு.

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா எனது ஏக்கமும் அதுதான்.. அந்த ஏக்கத்தை பதிவு செய்ய தான் இந்த கவிதை .........நன்றி நன்றி

      Delete
  3. மிகவும் போற்றத்தக்க வரிகள்:

    //பால்வாங்க வந்த பெரியவர்,
    பால்குடி மறக்காத குழந்தை,
    தாயின் அணைப்பில் இருந்ததற்கு
    சாட்சியாய் தாயின் கைமட்டும்
    குழந்தையோடு இருக்க -தாய்
    எங்கோ சின்னாபின்னமாகி!
    அனைவருக்கும் பால் ஊற்ற கூட
    பிரோயோஜன படாததால் பால் பாக்கெட்டும்
    உயிரிழந்து கொண்டிருக்கு!//

    என்ன ஒரு கொடுமை என எண்ணி என் மனமும் வருந்தியது.

    //ஜாதி மத பேதங்கள் தொலைந்து ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள் வழிந்து ஓடும் குருதிப்புனலில் குருதி பேதமும் தொலைத்திருந்தது!//

    இந்த நிலைக்குச்சென்றால் தான், உயிருடன் இருந்தவரை நமக்குள் இருந்து வந்த எல்லா பேதங்களும் தொலைந்திடுமோ?

    //இல்லை!சரியே ! கண்ட காட்சிகள் சாபம் என்றேன் சாகும் வரம் தந்துவிட்டாய். நன்றிகள் கோடி பரம்பொருளே !

    வலிதான் பொறுக்க முடியவில்லை. சீக்கிரம் முற்றுப்புள்ளி வை ... எனக்கும், நடக்கும் அத்தனை போருக்கும் !//

    நெஞ்சினை நெகிழ வைக்கும் வரிகள். பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் ரெண்டே ரெண்டு ஆஸ்கர் வாங்கியதை பெருசா பேசுறாங்க நான் இப்ப தினமும் ரெண்டு மூணு ஆஸ்கர் உங்களிடம் வாங்குரேனே .. வலைச்சரத்தின் மூலம் எனக்கு கிடைத்த மிக பெரிய பலம் நீங்க ஐயா நன்றி நன்றி

      நான் இந்த கவிதை எழுத மூன்று மாதங்கள் ஆனது ஐயா .. யார் மனமும் நோகாமல் அதே சமயம் செய்தியின் காரமும் குறையாமல் படைக்க சிரத்தை எடுத்தேன் அதன் பலன் உங்கள் பாராட்டுக்கள் நன்றி நன்றி ..மிக்க நன்றி ஐயா

      Delete
    2. எனக்கு ஒருசில முகமதிய நண்பர்களுடன் நெருங்கிய பழக்கம் உண்டு. அவர்களுக்கும் என்னிடம் அலாதியான பிரியம் உண்டு.

      நாங்கள் [ஐயர்கள்] தினமும் மூன்று வேளையும் சந்தியாவந்தனம் செய்ய வேண்டியவர்கள்.

      ஆனால் எங்களைவிட கூடுதலாக உங்களில் பெரும்பாலோர் நான்கு வேளைகள் தொழுகை நடத்துபவர்கள். சந்தோஷமாக உணர்கிறேன்.

      உங்களுக்கு ஒரு விஷ்யம் தெரியுமா? நீங்கள் தொழுகை நடத்த வேண்டியது தினமும் ஐந்து தடவைகள். உங்களின் வேதமாகிய குரானில் அதுபோலத்தான் சொல்லப்பட்டுள்ளது. நள்ளிரவிலும் ஒருமுறை தொழுகை நடத்தப்பட வேண்டுமாம்.

      >>>>> தொடர்ந்து பேசுவேன் >>>>>

      Delete
    3. என் அலுவலகத்தில் நான் வேலைக்குச்சேர்ந்த போது, என்னுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்து, இன்று வரை, அவ்வப்போது தன் நட்பினைத் தொடரும் ஷாஹுல் ஹமீத்.

      என் திருமணத்தின் போது [1972] என்னுடன் கூடவே ஜவுளிக்கடைக்கு வந்து எனக்கான ஒஸ்தியான துணிகளை செலக்‌ஷன் செய்து கொடுத்து, ஒரு குறிப்பிட்ட பிரபலமான டெய்லரிடம் கூட்டிச்சென்று அதை தைப்பதற்கும் உதவியவர்.

      பிறகு ஒருநாள் எனக்கும் என் தந்தைக்கும் ஏற்பட்டதொரு கருத்து வேறு பாட்டினால் நான் ஒருவாரம், கோபப்பட்டு என் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வேறொரு இடத்தில் தங்கியதை அறிந்த இவர், எனக்கே தெரியாமல் என் தந்தையுடன் பேசியதுடன் [1973], என்னையும் சமாதானப்படுத்தி திரும்பவும் எங்களை ஒன்று சேர்க்க பாடுபட்டவர்.

      இவரின் திருமண நிகழ்ச்சியில் மட்டும் நான் ஒரு அரை மணி நேரம் கலந்து கொண்டுள்ளேன்.

      என்னைப்பற்றி நன்கு அறிந்த இவர், எனக்கு மட்டும் தனியே ஒரு கூல்டிரிங்ஸ் வரவழைத்து, அருந்துமாறு கட்டாயப்படுத்தினார்.

      நானும் அவர் மேல் உள்ள அன்பினால் அதை ஏற்றுக்கொண்டேன். பிறகு கிளம்பி வந்து விட்டேன்.

      இவர் 1976 இல் அலுவலகத்தில் ஒரு கையெழுத்துப்பிரதி பத்திரிகை நடத்தினார். அதில் எனக்கும் நிறைய பங்கு உண்டு. அதற்கான ஓவியங்களை நானே வரைந்து கொடுப்பது வழக்கம்.

      நீண்ட நாட்களுக்குப்பின் சமீபத்தில் இவரை நான் சந்தித்தேன். கட்டித் தழுவிக்கொண்டார். நான் வெளியிட்ட மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தேன்.

      படித்து மகிழ்ந்து அலைபேசியில் நீண்ட நேரம் பேசிப் பாராட்டினார்.

      >>>>>>

      Delete
    4. அதுபோலவே ஹமீத் என்று ஒருவர். இவர் எனக்கு ஓர் ஆண்டு காலம் மேலதிகாரியாக இருந்தவர். தினமும் அலுவலகத்திலேயே இரண்டு வேளைகள் ஓர் துணியை விரித்து தொழுகை செய்வார்.

      நவாஸ்கான் என்றொருவர். என்னிடம் பணியாற்ற சம்பளப் பட்டுவாடா நாட்களில் மட்டுமே இவர் வருவார். பொய் பேசாதவர். மிகவும் நாணயமானவர். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்.

      இவரைப்போல சுமார் 40-50 பேர்களிடம் பல லட்சம் பணம் கொடுத்து மிகப்பெரிய அந்தத் தொழிற்சாலையின் பலவேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளப்பட்டுவாடா செய்ய நான் அனுப்பி வைப்பேன். அவசரப்படாமல் பொறுமையாக இருந்து கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டுச் செல்வார்.

      என்னுடைய ஆபீஸ் ஜீப் ஓட்ட அடிக்கடி மாறிமாறி வரும் டிரைவர்களில் ஒரு சில முகமதிய நண்பர்களும் உண்டு.

      >>>>>>>

      Delete
    5. ப்யாரே ஜான் என்று ஒருவர். ஹெவி டூடி வண்டிகளான பஸ்/லாரி போன்றவைகளின் ஓட்டுனர். தொந்தியும் தொப்பையுமாக இருப்பார். மிகவும் தங்கமானவர். எங்கள் வீட்டு அருகே [BHEL Township] குடியிருந்தவர். நாங்கள் மாடி வீடு, இவர் கீழ் வீடு. இவரைத்தாண்டி மேலே ஒரு ஈ. காக்காய் எங்களைப்பார்க்க மேலே வர முடியாது. அந்த அளவு ஒரு பாதுகாப்பாக எங்களுக்கு இருந்தவர். அவரை நான் “பிள்ளையார் பாய்” என்றே பிரியமாக அழைப்பதுண்டு. பார்க்கவும் பிள்ளையார் போலவே தொந்தியுடன் இருந்ததால். அவர் அதைத் தவறாகவே எடுத்துக்கொள்ள மாட்டார். என் குழந்தைகளும் அவரை பிள்ளையார் பாய் என்றே அழைத்து வந்தனர். கேட்டு மகிழ்வார். தூக்கிக்கொஞ்சுவார்.

      ரஹ்மான் என்று ஒருவர். Personal Secretary to General Manager / Finance. இவர் எதற்குமே டென்ஷன் ஆக மாட்டார். என்னிடம் இவருக்கு தனிப்பிரியம் உண்டு.

      GM/Finance அவர்கள் என்னை நொடிக்கு நூறு முறை அழைக்கக் கூடியவர். இவர் ஒவ்வொரு முறையும் என்னைத் தரைத் தளத்திலிருந்து இரண்டாவது மாடிக்கு லிப்டில் ஏறி வருமாறு டெலிபோன் செய்து அழைப்பார்.

      GM அவசரமாகத்தான் கூப்பிடுகிறார். நீங்கள் மெதுவாகவே வாருங்கள் என்பார். எனக்குத்தான் டென்ஷன் ஆகுமே தவிர இவர் எதற்குமே டென்ஷன் ஆகாதவர்.

      டென்ஷன் இல்லாமல் பணியாற்றும் அவரைப்பார்த்தாலே எனக்கு சற்று பொறாமையாக இருக்கும்.

      >>>>>>

      Delete
    6. குத்புதீன் என்றொரு அலுவலக உதவியாளர். வேறு துறையில் பணியாற்றிய அட்டெண்டர். நான் பணியாற்றும் பகுதிக்கு வரும் போதெல்லாம் என்னைப்பார்த்து சிரித்து விட்டு, சலாம் போட்டு விட்ட பிறகே போவது வழக்கம். எந்த உதவி கேட்டாலும், தட்டாமல் செய்து கொடுப்பார்.

      இதுபோல மறக்க முடியாத பல முகமதிய நண்பர்கள். இப்போது இந்த வலையுலகில் தாங்களும் ஒருவராக எனக்குக் கிடைத்துள்ளீர்கள்.

      >>>>>

      Delete
    7. எங்கள் ஹிந்து மதத்தில், நான்கு வேதங்களில், அதர்வண வேதம் என்று ஒன்று உள்ளது. அதில் துர்தேவதைகளால் [சாத்தான்கள் போல] மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைப்போக்க பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

      நன்கு படித்து நல்ல உத்யோகத்தில் இருந்த, எனக்குத்தெரிந்த ஒரு பையனுக்கு திடீரென உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட போது, காரைக்குடி அருகெ ஒரு பிரபல ஜோஸ்யரிடம் போய் பரிகாரம் கேட்கப்பட்டது. அவர் சொன்ன பரிகாரங்களில் ஒன்று, முஸ்லீம்களின் மஸூதிக்குச்சென்று அங்குள்ள வேதம் ஓதுபவரை விட்டு, குரானின் ஒரு பகுதி முழுவதும் தினமும் ஓதச்சொல்லி, ஒரு வாரம் தினம் ஒரு மணி நேரம் வீதம் இந்தப்பையன் அதைக்கேட்டால் நல்லது என்றார்.

      அவரே மேலும் சொன்னார், ”நம் அதர்வண வேதத்திலும் இது போல உள்ளது. எனினும் குரானில் உள்ளது உடனடியாக நிவாரணம் கொடுக்கக்கூடியது” என்று.

      நான் அந்த பாதிக்கப்பட்டப் பையனுடன் தினமும் துணைக்காகவும், பாதுகாப்புக்காகவும் மஸூதிக்குச் சென்று வந்தேன்.

      அங்கிருந்த முகமதிய நண்பரை எனக்கு இன்னும் நல்ல ஞாபகம் உள்ளது. அவரிடம் எல்லாவற்றையும் தெரிவித்தோம்.

      ஒரு பாட்டில் நிறைய தண்ணீரை வைத்துக்கொண்டு, ஊதுபத்திகளை ஏற்றி வைத்து விட்டு மிகவும் சிரத்தையாக தினமும் ஒரு மணி நேரம் குரானிலிருந்து அந்த குறிப்பிட்ட பகுதியை வேதம் ஓதி முடித்து, அந்தத்தண்ணீரை அந்தப்பையனின் முகத்தில் தெளித்து
      வந்தார். பிறகு படிப்படியாக அந்தப்பையனுக்கும் குணமானது.
      அவருக்கான தக்ஷிணை முதலியவற்றை கடைசி நாளன்று, ஒரு தட்டு பழங்களுடன் வைத்துக்கொடுத்து விட்டு வந்தோம்.

      அதன்பிறகும் அந்த அருமை நண்பர் எங்களை எங்காவது சந்திக்கும் போதெல்லாம், அன்புடன் அந்தப்பையனைப் பற்றி ஞாபகமாக விசாரித்து வந்தார்.

      ஒரு ஊரைச்சென்று அடைய பலவித மார்க்கங்கள் [வழிகள் / சாலைகள்] இருப்பது போலவே, பரம்பொருளை சென்றடைய பல்வேறு மதங்கள் தோன்றியுள்ளன. எல்லா மதங்களுமே அன்பையும் மனித நேயத்தையும் தான் போதிக்கின்றன,

      இதை அனைவரும் புரிந்து கொண்டு, உலகில் உள்ள அனைவரும் நம் உடன் பிறந்தவர்களே என நினைத்து அன்பு செலுத்தினால், ஜாதி மத இன மொழி பிரச்சனைகளே இல்லாமல் போகும் தானே.

      அன்புடன்
      VGK

      Delete
    8. நீங்கள் உங்கள் வாழ்வில் நட்பிற்கும் நடக்கும் அணைத்து சம்பவங்களுக்கும் கொடுக்கும் மரியாதையை உங்கள் கருத்துக்கள் பிரதிபலிகிறது.இதுவே உங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷம் ஐயா. இதனால் தான் உங்கள் எழுத்துக்களும் சிகரத்தில் இருக்கிறது.நகரும் ஒவ்வொரு நிமிஷத்திலும் சந்தோசம் இருக்கு அதை அனுபவிக்கவேண்டும், அதை தவறவிட்டு தேடிக்கொண்டு பலர் இருக்கிறார்கள். நீங்கள் அனுபவித்து,அசைபோட்டு எழுதி அந்த ஏக இறைவனின் உள்ளம் மகிழ செய்கிறீர்கள் .....வலுதுக்கள் ஐயா ..

      என் எழுத்தை மதித்து உங்களின் அனுபவங்களை இங்கே பகிர்ந்து இந்த கவிதைக்கு அழகு சேர்த்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

      ///ஒரு ஊரைச்சென்று அடைய பலவித மார்க்கங்கள் [வழிகள் / சாலைகள்] இருப்பது போலவே, பரம்பொருளை சென்றடைய பல்வேறு மதங்கள் தோன்றியுள்ளன. எல்லா மதங்களுமே அன்பையும் மனித நேயத்தையும் தான் போதிக்கின்றன,

      இதை அனைவரும் புரிந்து கொண்டு, உலகில் உள்ள அனைவரும் நம் உடன் பிறந்தவர்களே என நினைத்து அன்பு செலுத்தினால், ஜாதி மத இன மொழி பிரச்சனைகளே இல்லாமல் போகும் தானே.////

      நீங்கள் நேற்று படித்து ரசித்து கருத்திட்ட எனது சிறுகதையிலும் இந்த கருத்தை தான் சொல்லி இருந்தேன் ! மேலும் ஒரு கட்டுரையில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை படித்து பகிர்ந்தேன் இப்படி http://tamilyaz.blogspot.com/2011/06/blog-post_08.html நேரம் இருந்தால் படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்

      Delete
    9. என் பின்னூட்டத்திற்கு தாங்கள் எழுதியுள்ள பதிலுக்கு என் நன்றிகள்.

      நான் சொல்ல வந்ததில் விட்டுப்போன ஒரு சில செய்திகள் உள்ளன.
      அதையும் சொன்னால் தான் என் மனதுக்குத் திருப்தியாகும்.

      என் “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற 90% உண்மை + 10% கற்பனைக்கதையின் முதல் பகுதியில் ஒரு ஸ்டோர் [அதாவது குடியிருப்புப்பகுதி] பற்றி சொல்லியிருப்பேன் அல்லவா. அதில் மொத்தம் 52 ஐயர் குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

      அவர்களில் சிலருக்குள் சில சமயம் மட்டும் குழாயடிச்சண்டை முதலியன ஏற்படுவது உண்டு.

      அவ்வளவு பெரிய 52 மிகச்சிறிய ஓட்டு வீடுகள் அமைந்த ஒரு ஸ்டோரை [குடியிருப்பை] உலகில் எங்குமே காண முடியாது.

      அதில் நாங்கள் 1962 முதல் 1981 வரை சுமார் 20 வருஷங்கள் குடியிருந்தோம். இந்த ஸ்டோர் நாராயண ஐயர் என்பவருக்கு 19ம் நூற்றாண்டில் சொந்தமாக இருந்துள்ளது. அவரே திட்டமிட்டு கட்டியுள்ளார்.

      அதன் பிறகு 20ம் நூற்றாண்டில் அது அப்படியே வேறு யாருக்கோ விற்கப்பட்டுள்ளது. நாங்கள் குடியிருந்த கால கட்டத்தில் அது அண்ணன் தம்பியாகிய இரண்டு சாயபுகளுக்குச் சொந்தமாக இருந்தது.

      மொத்த ஏரியா ஒரு 25000 சதுர அடிகளுக்கு மேல் இருக்கும். அதிக வசதிகள் கிடையாது. மிகக்குறைந்த வாடகை மட்டுமே. திருச்சி நகரத்தின் மிக முக்கியமான [HEART OF THE CITY] பகுதியில் அமைந்திருந்தது.

      >>>>>>

      Delete
    10. அதே தெருவில் மொத்தம் 10 வீடுகளே உள்ள சின்ன நாராயண ஸ்டோர் என்றும் ஒன்று இருந்தது. அது மட்டும் இப்போதும் உள்ளது.

      அதனால் அன்று நாங்கள் இருந்த குடியிருப்பின் பெயர் “பெரிய நாராயண ஐயர் ஸ்டோர்” என்பதாகும். அது இப்போது இன்று இல்லை. பல்வேறு அடுக்குமாடிக்கட்டடங்களும், வணிக வளாகங்களும் வந்து விட்டன். அடியோடு மாறிப்போய் உள்ளது.

      ’எந்தையும் தாயும் இருந்து குலாவி மகிழ்ந்ததும் இந்த இடமே’ என்ற நன்றி உணர்வால், பாசத்தால், நேசத்தால் நானும் அந்த அடுக்குமாடி குடியிருப்பினில் ஒன்றினை, பலத்த போட்டாப் போட்டிகளுக்கு இடையே அதிகப்பணம் கொடுத்து வாங்கி, இன்றும் நான் அங்கேயே குடியிருந்து, இதை உங்களுக்கு அதே இடத்திலிருந்து தான் டைப் அடித்து வருகிறேன்.

      >>>>>>

      Delete
    11. நாங்கள் குடியிருந்த காலக்கட்டத்தில், அந்த சிவப்பு மற்றும் கருப்பு சாயபு சகோதரர்களால் எங்களுக்கு எந்த ஒரு சிறிய தொல்லையும் இருந்தது இல்லை. மேலும் பல வசதிகளும் செய்து தர மாட்டார்கள். தொல்லைகளும் கொடுக்க மாட்டார்கள்.

      வாடகைப்பணம் வசூல் செய்து தரவும், அதே ஸ்டோரில் ஒரு ஐயரை நியமித்திருந்தார்கள். எப்போதாவது வருஷம் ஒருமுறை மட்டும் ஒரு அரை மணி நேரம் வருவார்கள். ஒரு பார்வை பார்ப்பார்கள். ஒரே ஒரு குறிப்பிட்ட வீட்டில் [வாடகை வசூல் செய்து தருபவர் வீட்டில்]மட்டும் சற்று நேரம் அமர்ந்து, பேசி விட்டு, பிறகு புறப்பட்டுப்போய் விடுவார்கள்.

      அவர்கள் மட்டும் மனதில் நினைத்திருந்தால் எங்களுக்கு [குடியிருப்பு வாசிகளுக்கு] பல்வேறு தொல்லைகளை பல வழிகளில் கொடுத்திருக்க முடியும்.

      முழுவதும் ஐயாராக குடியுள்ளவர்களுக்கு இடையே காலியாகும் வீடுகளை மற்ற இனத்தவர்களுக்கும், குறிப்பாக தன் இனமான முகமதியர்களுக்கும் கூட அதிக வாடகைக்குக் கொடுத்திருக்க முடியும் அல்லவா?

      அதுபோல அவர்கள் செய்யவில்லை. பிற மதத்தினரையும், அவர்களின் உணர்வுகளையும் மிகவும் மதித்துள்ளனர்.

      காலியாகும் வீடுகளை பிற்காலத்தில் அதாவது 1995 க்கு மேல் பூட்டியே வைத்தார்கள். மீதி வீடுகளில் உள்ள எல்லோரையும் காலிசெய்யச்சொல்லி நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

      அதன் பிறகு முற்றிலும் காலியான பிறகு, அதை வேறு சிலருக்கு விற்றுள்ளார்கள். அதன் பிறகே அடுக்கு மாடிக்கட்டடங்களும், வணிக வளாகங்களும் வந்துள்ளன.

      >>>>>>

      Delete
    12. 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் ஒரு 45 நாட்கள் நான் வளைகுடா நாடுகளில் தங்கியிருந்தேன். அதைப்பற்றியும் என் அனுபவங்களைத் தொடர நினைக்கிறேன். சற்றே நீண்ட இடைவெளிக்குப்பின் மீண்டும் தொடர்வேன்.

      >>>>>>

      Delete
    13. நான் முதன் முதலாக மேற்கொண்ட விமானப்பயணமும் வெளிநாட்டுப்பயணமும் U.A.E. க்கு மட்டுமே.

      திருச்சி விமான நிலையத்திலிருந்து பகல் மிகச்சரியாக 12 மணிக்குக் கிளம்பிய அந்த விமானம் நேராக 5 மணி நேரங்களில் ஷார்ஜா சர்வ தேச விமான நிலையம் சென்று அடைந்தது.

      நடுவில் 12.30 முதல் 1 மணி வரை மட்டும் 1/2 மணி நேரம் திருவனந்தபுரத்தில் விமானம் தங்கிச்சென்றது.

      நாங்கள் சார்ஜா சென்று விமானத்திலிருந்து இறங்கிய நேரம் என் கைக்கடியாரத்தில் மாலை 5 மணி. அந்த நாட்டின் நேரம் பிற்பகல் 3.30 மட்டுமே, என் கைக்கடியாரத்தை ஒன்றரை மணி நேரம் குறைவாக்கி திருப்பி வைத்துக்கொண்டேன்.

      2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில் 45 நாட்கள் அங்கு தங்கி, ஷார்ஜா, துபாய், அபுதாபி முதலிய பல இடங்களை சுற்றிப்பார்த்து அனுபவித்தேன்.

      எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை என் டயரியில் அன்றாடம் சிறு குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளேன். பயணக்கட்டுரையாக எழுதவும் நினைத்தேன். ஏனோ இன்றுவரை அது முடிவடையாமலேயே உள்ளது.

      அப்போதெல்லாம் வலைத்தளம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் வலைத்தளம் ஆரம்பித்து முதன் முதலாக பதிவு இட்டது 02.01.2011 அன்று மட்டுமே.

      >>>>>>>

      Delete
    14. முகமதியர்கள் நாடான அந்த துபாயை விட்டு எனக்கு திரும்ப இந்தியா வர மனதே இல்லை.

      அவ்வளவு ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடுகள், தரமான சாலைகள், செல்வச் செழிப்புகள், கடும் உழைப்பாளிகள், அனைத்திலும் தரமே தாரக மந்திரம் என நான் ஒவ்வொன்றையும் மிக மிக மிக மிக ரஸித்து மனதில் ஏற்றிக்கொண்டு வந்தேன்.

      அது எனக்கு ஒரு சுவர்க்க பூமியாகவே காட்சி அளித்தது.

      அங்குள்ள துபாய் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு விழாவிலும் நான் CHIEF GUEST ஆகப் பங்கேற்று கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிக்கவும், நான் உரையாற்றிடவும் எனக்கு வாய்ப்புக் கிடைத்தது.,

      பல்வேறு மக்களின் பாசத்தினை என்னால் நன்கு உணர முடிந்தது.

      >>>>>>>

      Delete
    15. அன்றைக்கு எனக்கு துபாயில் ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை மட்டும் என் பதிவுகள் சிலவற்றில் படங்களுடன் இணைத்துள்ளேன்.

      தலைப்பு: “மலரும் நினைவுகள்”

      இணைப்பு:

      http://gopu1949.blogspot.in/2011/07/1.html
      நல்லதொரு குடும்பம்

      http://gopu1949.blogspot.in/2011/07/2.html
      அலுவலக நாட்கள்

      http://gopu1949.blogspot.in/2011/07/3.html
      என்னை வரவேற்ற எழுத்துலகம்

      http://gopu1949.blogspot.in/2011/07/4.htmll
      நூ்ல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

      http://gopu1949.blogspot.in/2011/07/5.html
      என் துபாய்ப் பயணம்

      http://gopu1949.blogspot.in/2011/07/6.html
      கலைகளிலே அவள் ஓவியம்

      http://gopu1949.blogspot.in/2011/07/of-2011.html
      இந்த நாள் இனிய நாள் [100 ஆவது பதிவு]

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
      வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. புதிய கட்சி மூ.பொ.போ.மு.க. உதயம்
      நகைச்சுவைக்கதை ஆரம்பம் முதல் பகுதி.[பகுதி 1 / 8]

      அதே கதையில் துபாய் பயணம் பற்றி வரும் நகைச்சுவைப்பகுதி படிக்க http://gopu1949.blogspot.in/2011/03/7.html [பகுதி 7 / 8]


      இப்போது அதே துபாய் பல்வேறு வளர்ச்சிகளை மேலும் எட்டியுள்ளது.

      உலகிலேயே உயரமான கட்டடங்கள், ரயில் போக்கு வரத்துகள் என நாளுக்கு நாள் ஏராளமான வளர்ச்சிகளை மேலும் மேலும் எட்டியுள்ளது.

      மீண்டும் நான் அங்கு செல்லும் போது நிச்சயமாக அவற்றைப்பற்றி என் வலைத்தளத்தில், லேட்டஸ்ட் ஆக எழுதுவேன்,

      முகமதிய நாடான துபாயில் இன்று உலகின் பல நாட்டுக்காரர்கள், மிகவும் அமைதியுடன், எந்தவொரு பிரச்சனையும் இன்றி சுகமாகவே வாழ முடிகிறது.

      இது எப்படி சாத்தியமாகிறது?

      கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம். கடும் உழைப்பு, எந்த ஒரு செயலிலும் தரம் ஒன்றே தாரக மந்திரம், தாராள குணம், மனித நேயம், ஒருவர் மேல் மற்றொருவருக்கு உள்ள நம்பிக்கையும், அன்பும், மரியாதையும் தான் முக்கியக்காரணமாக உள்ளது என நான் நினைக்கிறேன்.

      /முற்றும்/

      அன்புடன்
      VGK

      Delete
    16. //இப்போது அதே துபாய் பல்வேறு வளர்ச்சிகளை மேலும் எட்டியுள்ளது.

      உலகிலேயே உயரமான கட்டடங்கள், ரயில் போக்கு வரத்துகள் என நாளுக்கு நாள் ஏராளமான வளர்ச்சிகளை மேலும் மேலும் எட்டியுள்ளது.

      மீண்டும் நான் அங்கு செல்லும் போது நிச்சயமாக அவற்றைப்பற்றி என் வலைத்தளத்தில், லேட்டஸ்ட் ஆக எழுதுவேன்//

      மீண்டும் துபாய் சென்று வந்தேன். 20 பகுதிகளாக ஒரு தொடர் ஏராளமான படங்களுடன் கொடுத்துள்ளேன்.

      முதல் பகுதிக்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2014/12/blog-post.html

      நிறைவுப்பகுதி-20க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2015/01/20.html

      இது தங்களின் தகவலுக்காக மட்டுமே. அன்புடன் VGK

      Delete
  4. வரிகளில் எவ்வளவு அழுத்தம்.. ! என்று தீருமோ இந்த வெடிகுண்டு கலாச்சாரம்!! எதற்காக இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை.. வாழ்க்கை என்று முடியும் எனபது பரம் பொருளுக்கே வெளிச்சம் இதில் ஏனிந்த மனிதமற்ற மனித வேட்டை !!!

    கவிதை மிக அருமை ரியாஸ்!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ....உங்களை தொடர் வருகையும் பாராட்டும் உற்சாகம் தருகிறது . நன்றி நன்றி

      Delete
  5. ஜாதி மத பேதங்கள் தொலைந்து
    ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
    வழிந்து ஓடும் குருதிப்புனலில்
    குருதி பேதமும் தொலைத்திருந்தது!


    நடக்கையில் எறும்புகளை மிதித்து
    கொன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு .
    இது எறும்புகளின் கோவமோ ?!
    புத்தனுக்கும் கோபம் வரும்
    காலம் இது -என் சந்தேகத்தில் பிழையில்லை !

    சமர்பிக்க சொல்லும் இறைவனிடம்
    சமர்ப்பித்து இருந்தால் சங்கடங்கள் தீரும்!
    பொறுமையின்றி உயிரெடுத்து கொன்றுகுவித்து
    யாருக்கு நீதியை நிலைநாட்ட போகிறார்கள்
    இந்த ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
    விஸ்வரூபம் விஷபரிட்சையே !//

    செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவான் என இறைவனிடம் சமர்ப்பித்து இருக்கலாம்.
    எல்லோரும் நம் மக்கள் நம் தேசம் என்ற நினைப்பு மனதில் இருந்தால் இந்த மாதிரி கொடூர செயல் நடைபெறாது.
    அருமையான் கவிதை. மூன்று மாத் உழைப்பு நல்ல கவிதையை கொடுத்து இருக்கிறது.
    மனித நேயம் மலர்ந்து அமைதியும் ஆனந்தமும் நிறைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. உங்களது விளக்கமான கருத்துக்கள் இந்த கவிதைக்கு வலுசேர்க்கும் ....நன்றி நன்றி ...வெள்ளை பூக்கள் மலர்ந்து உலகெங்கும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் ....

      Delete
  6. ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
    விஸ்வரூபம் விஷபரிட்சையே !

    விஷ்ப்பரீட்சை வேண்டாமே !!

    ReplyDelete
    Replies
    1. ஐயோ என் கவிதையை விஷபரிட்சைன்னு சொல்லலையே ...ஹி ஹி ....
      விஷபரிட்சை வேண்டாம் என்ற செய்தியை தான் நானும் சொலிருக்கேன் நன்றி நன்றி நன்றி

      Delete
  7. // இல்லாத வீரத்தை தேடாமல்
    இருக்கின்ற ஈரத்தினால் கதருவோருக்கு
    உதவ நாடியது மனம் !
    // - ஈரம் எல்லா மனங்களிலும் இருந்துவிட்டால் வன்முறைத் தீயும் பற்றாது. நல்ல மனித நேய கவிதை! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/13.html

    ReplyDelete