1.09.2013

கொலை +தற்கொலை =சிறை





வங்கியில் பணம் செலுத்தி
மடியில் கணம் குறைந்ததை எண்ணி
மகிழ்ச்சியுடன் வரும் என்னை நோக்கி
பாய்ந்தன முரட்டு கைகள்
தோலில் வலி உணரும்போதே
செவிக்கும் வசைமொழி விருந்தானது
முரண்டு பிடித்த அந்த கணத்தில்
பளபளவென ஒரு கத்தி
காற்றில் மிதந்தபடி வந்து
வயிற்றில் பாய்ந்தது !

என்னிடம் ஏதும் இல்லாததால்
அவர்களுக்கு இது தோல்வி !
கோபம் அதிகரிக்க சுருண்டு
விழுந்து கிடக்கும் எனக்கு
இலவச இணைப்பாக முகத்தில்
 ஓங்கி ஒரு மிதி !


என்னை குத்திய திருடர்கள்
நிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
கத்தியையும் விட்டு வைக்காமல்
பிடுங்கி செல்கின்றனர் !

வயிற்றில் வழியும் இரத்தத்தை காண
தைரியம் இல்லை ஆனால் கைகளில்
உணர்கிறேன்- என் ஐம்புலனும்
சிவந்திருப்பதையும்  சிந்தை உணர்த்துகிறது!

பற்களை கடித்துகொண்டு வலியை
பொறுத்துக்கொண்டு இப்படியே என்னை
மாய்த்துகொள்ள  விரும்புகிறேன்.
இது தற்கொலை அல்ல, மரணிக்க
கிடைத்த நுழைவு சீட்டு இதையாவது
சரியாக பயன்படுத்த நாடினேன்.

ஆள் நடமாட்டம் அதிகமில்லை
நானும் சத்தமிடவில்லை
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில்
முயற்சி செய்துகொன்டிருக்கும் எனக்கு
இது நிரந்தர தோல்வி அவ்வளவே !

தோற்றவர் ஏமாந்தோருக்கு கூட
ஞானிகள் என்று பட்டம் தந்து மகிழ்கிறோம் !
முயற்சிக்கும் என் போன்றோருக்கு
வெறுமையும் விரக்தியும் பரிசானால்
மரணமே மோட்சம் !

மனைவியின் காதலும்
மழலையின் மொழியும்
கண்களில் காட்சிகள் மங்கி
மறையும் கணத்தில் வாழவேண்டும்
என்ற ஆசை தீயை பற்றவைகிறது !

வேண்டாம் நான் இல்லாமல் போனால்
என் உலகம் இன்னும் அழகாக வாய்ப்பிருக்கிறது !
அதை கெடுக்க மனமின்றி கண்மூடி போகிறேன் !
நிச்சயம் கண்விழிப்பேன்  பெரும் பாவம்
செய்யாததால் அது சொர்க்கமாகவே இருக்கும் !


மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
மீண்டும் சிறைப்பட்டேன் !


-------------------

இது மீள் பதிவு --


வலைச்சரத்தில்..........
இன்று :2518.சிரிக்க !ரசிக்க !வலிக்க .........

நேற்று :2517.சிகரெட்டும் சின்சியாரிட்டியும்

27 comments:

  1. உங்களின் வாழ்க்கை அனுபவமா?

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்தது பணம் இழந்தேன் ,அப்போது என் எண்ணம் இப்படி தான் இருந்தது.கத்திகுத்து ரத்தம் ஹாஸ்பிடல் எல்லாம் கற்பனை ...நன்றி சகோ

      Delete
  2. மிகவும் அழகோ அழகான பதிவு. வரிக்கு வரி மிகவும் ரஸித்துப்படித்தேன்.

    சோக நிகழ்ச்சியை மிகவும் சுகமாகவே சொல்லும் உங்கள் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>> தொடரும் >>>>>

    ReplyDelete
  3. //என்னிடம் ஏதும் இல்லாததால்
    அவர்களுக்கு இது தோல்வி !
    கோபம் அதிகரிக்க சுருண்டு
    விழுந்து கிடக்கும் எனக்கு
    இலவச இணைப்பாக முகத்தில்
    ஓங்கி ஒரு மிதி !//

    இலவச இணைப்பு .... ;)

    ஆஹா, இந்த வரிகளில் நானும் ஒரு கவிஞன் தான் எனச் சொல்லாமல் சொல்லி ஏற்க மறுப்போராகிய எல்லோர் முகங்களிலும் ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டீர்களே! சபாஷ் !! ;)

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வாய்கால் தகராறு இப்ப இது வேறையா ....ஹி ஹி நன்றி ஐயா ...ரசித்ததை குறிப்பிட்டு சொல்வது மிகவும் உற்சாகம் தருகிறது ஐயா ...நீங்க தினமும் அனுபவிக்கும் சந்தோசம் என்பதால் அதை கொடுத்து மகிழ்கிரிகள் நன்றி நன்றி நன்றி

      Delete
  4. //என்னை குத்திய திருடர்கள்
    நிச்சயம் கஞ்சர்களே - சொருகிய
    கத்தியையும் விட்டு வைக்காமல்
    பிடுங்கி செல்கின்றனர்!//

    விட்டுச்சென்றால் கைரேகை பதிவினால் மாட்டிக் கொள்வார்கள் அல்லவா!

    அதனால் மட்டுமே இந்தக் கஞ்சத்தனம்.

    இந்த இடத்தில் தாங்கள் கஞ்சமில்லாமல் உபயோகித்துள்ள “கஞ்சத்தனம்” என்ற வார்த்தை நல்ல நகைச்சுவையாக அமைந்துள்ளது. ;)


    ”கத்தி” என்றதும் ஏனோ நான் எழுதியுள்ள அரை வேக்காட்டுக் கவிதையொன்று நினைவுக்கு வந்தது.

    அதைத்தான் நான் சோதனைப்பதிவாக கொடுத்திருந்தேன், வலையுலகில் நான் கால் பதிக்கும் முன்பு.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2010/10/blog-post.html

    தலைப்பு: கத்தி [ப்] பேசினால்

    >>>>>>

    ReplyDelete
    Replies
    1. கத்தி பேசியிருக்கிறேன் உங்கள் கவிதையை படித்துவிட்டு ... ஹி ஹி

      Delete
  5. //இது தற்கொலை அல்ல, மரணிக்க
    கிடைத்த நுழைவு சீட்டு இதையாவது
    சரியாக பயன்படுத்த நாடினேன்.//

    நுழைவுச்சீட்டு பெற்று விட்டால் மட்டும் நுழைந்து விடவா முடிகிறது .... நம்மால்?

    ** மரணிக்கக்கிடைத்த நுழைவுச்சீட்டு **

    நல்லதொரு சொல்லாடல் ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. // நுழைவுச்சீட்டு பெற்று விட்டால் மட்டும் நுழைந்து விடவா முடிகிறது .... நம்மால்?///
      ஆமாம் ஐயா எனக்கு சினிமா டிக்கட் கூட ப்ளாக்கில் தான் கிடைக்கும் ஹி ஹி ......
      நன்றி நன்றி நன்றி

      Delete
  6. //மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
    என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
    இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
    வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
    கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
    மீண்டும் சிறைப்பட்டேன் !//

    அருமை.... அருமையோ அருமை.

    ”மீண்டும் சிறைப்பட்டேன்” என்ற இந்த கடைசி இரண்டு வார்த்தைகளில் மயங்கிப்போன நானும்
    ”மீண்டும் சிறைப்பட்டேன்” உங்களின் இன்றைய இந்தப்பதிவினிலும் எழுத்துக்களிலும்.

    வாழ்க வாழ்க வாழ்க ! நீங்கள் நீடூழி வாழ்க !!

    உங்கள் எழுத்துக்கள் மேலும் மேலும் இதுபோலவே ஜொலிக்கட்டும். என் அன்பான பாராட்டுக்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK


    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி ஐயா ....உங்கள் வாழ்த்து கிடைக்கக் நான் என்ன பாக்கியம் செய்தேனோ....!நன்றி நன்றி நன்றி ........

      இன்னும் பொறுப்பாக எழுத ஆவல் பெருகிவருகிறது !எல்லாம் வல்ல இறைவன் படைக்க எனக்கு ஆற்றலும் படிக்க உங்களுக்கு பொறுமையும் தந்து அருளவேண்டி வருகிறேன் ..நன்றி நன்றி

      Delete
  7. வித்தியாசமான சிந்தனை
    சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே ... நன்றி நன்றி நன்றி

      Delete
  8. மெல்ல மெல்ல கண் விழிக்கிறேன்
    என்னை பார்த்ததும் கதறி மண்டியிட்டு
    இறைவனுக்கு நன்றி சொல்கிறாள் மனைவி
    வரவேற்கும் வண்ணம் மழலையின் சிரிப்பை
    கண்டதும் அன்பும் அறனும் நினைவுக்கு வர
    மீண்டும் சிறைப்பட்டேன் !///

    அருமையான வரிகள்.
    அன்பு சிறையில் இருந்து தப்ப நினைக்கலாமா!

    ReplyDelete
  9. உங்க அனுபவத்தை வலியோடு வரியாக்கி இருப்பது ரொம்ப அருமை!!

    ReplyDelete
  10. நான் திருச்சி BHEL Township இல் 1981 முதல் 2000 வரை குடியிருந்தபோது, அங்கு மனமகிழ் மன்றம் என்ற மிகப்பெரிய அரங்கினில் அடிக்கடி பல VIPs வருகை தருவார்கள்.

    முத்தமிழ் மன்ற நிக்ழ்ச்சிகளில் நான் மிகுந்த் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வேன்.

    பட்டிமன்றத் தலைவர்கள் சாலமன் பாப்பையா, ஞான சம்பந்தன், ராஜா, நாடக நடிகர்கள் R S மனோஹர், காத்தாடி ராமமூர்த்தி, டெல்லி கணேஷ் போன்ற பிரபலங்களை இங்கு நான் சந்தித்துள்ளேன், பேசியுள்ளேன்.

    எங்கள் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களையும், பெருந்தலைவர் காமராஜ் அவர்களையும் நேரில் மிக அருகில் சந்தித்துள்ளேன்

    அப்போது இந்த மனமகிழ் மன்றத்திற்கு, அவ்வப்போது, பிரபலமான கவிஞர்களை [அப்துல் காதர், அப்துல் ரஹ்மான் போன்றவர்கள்] வரவழைத்து சிறப்பான நிகழ்ச்சிகளும், கவி அரங்கங்களும் ஏற்பாடு செய்வது உண்டு. கவிதைப்போட்டிகளும் நடத்துவது உண்டு.

    அதில் ஒரு நாள் கலந்து கொண்ட எனக்கு அப்துல் காதர் அவர்கள் கொடுத்திருந்த தலைப்பு “இறைவன் கேட்கின்றான்” என்பது.

    15 நிமிடத்திற்கு நான் இந்தத் தலைப்பில் கவிதை எழுதி அவரிடம் மேடையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். என்னைப்போல மேலும் ஒரு பத்து பேர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. ON THE SPOT கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் 15 நிமிடத்திற்குள் ஓர் கவிதை எழுதிக்கொடுத்து விட வேண்டும்.

    ஆயிரக்கணக்கான தமிழ்ப்பற்றுள்ளவர்களுடன் சபை நிறைந்து வழியும். நல்லதொரு வசதியான இடம். மேடையும் ஜோராக இருக்கும். மைக் வசதிகள் எல்லாம் உண்டு. தரமான சினிமா தியேட்டர் போல சுகமான இருக்கை வசதிகளுடன் இருக்கும்.

    எனக்குக்கொடுத்துள்ள தலைப்பில் நான் 10 நிமிடத்தில் கவிதை எழுதி கவிஞரிடம் கொடுத்து விட்டேன்.

    படித்ததும் வாய் விட்டுச்சிரித்தார். என் கையைப்பித்துக் குலுக்கினார். பிறகு அந்தக்கவிதையை மேடையில் மைக் முன் நின்று அழகாக நிறுத்தி வாசிக்க வாய்ப்பு அளித்தார்.

    நான் வாசித்து முடித்ததும் சபையின் கைத்தட்டல் அடங்க பல மணித்துளிக்ள் ஆனது.

    இவ்வளவு பெரிய ஒரு கைத்தட்டல் இதுவரை யாருக்குமே கிடைத்தது இல்லை என்று பேசினார் மனமகிழ்மன்றச் செயலாளர் அவர்கள்.

    எங்கள் கம்பெனியின் General Manager [HR] அவர்கள் தான் [Mr ANANDAN என்று பெயர்] மனமகிழ் மன்றத்தின் அன்றைய தலைவர். அவரும் என்னை தனியே அழைத்துப் பாராட்டினார்.

    தி.மு.க., மற்றும் அ.இ.அ.தி.மு.க. நண்பர்கள் எல்லோருமே என்னைக் கட்டித்தழுவி பாராட்டினார்கள். எனக்கு வீட்டுக்குச் செல்லவே அன்று மிகவும் பயமாக இருந்தது.

    >>>>>>>

    ReplyDelete
    Replies
    1. ஆகா கவிதையை படிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகிவிட்டது ஐயா

      Delete
  11. 1992 என்று ஞாபகம். செல்வி ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்ச்சராக முதன் முறை பதவி ஏற்று ஓர் ஆண்டு மட்டுமே ஆகியிருந்த காலகட்டம் அது.

    அது சமயம் அவரை யாரும் அவ்வளவு சுலபமாகப் போய் சந்தித்துப் பேசிவிட முடியாது. ஆளும் கட்சி M.L.A. க்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் ஆளுங்கட்சி மந்திரிமார்களே கூட அவரை நெருங்க முடியாமல் இருந்த நேரம் அது.

    பத்திரிகை நிரூபர்களோ, எதிர்கட்சிக்காரர்களோ, கட்சித்தொண்டர்களோ என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம்.

    இந்த ஒரு காலக்கட்டத்தில் தான், இதை மனதில் வைத்துத்தான், நான் அன்று எனக்குக் கொடுத்த தலைப்பில் கவிதை எழுதியிருந்தேன்.

    >>>>>>>>

    ReplyDelete
    Replies
    1. என்னால் அந்த சூழலை புரிந்து கொள்ள முடிகிறது ! இந்த விளக்கம் அந்த சூழல் புரியாதவர்களுக்கும் புரிந்துகொள்ள உதவும் ...நண்பர்களே இப்ப போயி அந்த கவிதையை படிங்க அசந்து போவீங்க .....

      Delete
  12. இதோ அந்தக்கவிதை:
    ======================

    தலைப்பு: ”இறைவன் கேட்கின்றான்”
    ==================================

    இறைவன் கேட்கின்றான்

    ”வரம் ஒன்று வேண்டுமென்று....”


    வரம் கொடுக்கும் இறைவனுக்கே வரமா?


    ”என்ன வரம் ஸ்வாமீ?”

    பக்தியுடன் வினவினேன்


    ”அரசியலில் புகுந்து நானும்

    அமைச்சராக வேண்டுமென்றார்!”


    ”அம்மையாரைப்போய் பாரும்” என்றேன்!!


    ”அதற்குத்தான் வரம் வேண்டுமென்றார்”.

    -=-=-=-=-=-=-=-

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர்களை விட உங்களுக்கு தைரியம் அதிகம்தான் ஐயா. எழுத்தாளருக்கே உண்டான தைரியம் இதுதானா ஐயா.

      Delete
    2. வலைச்சரத்தில் அரசியல் காரணத்திற்க்காக சொல்லவில்லை என்று சொன்னிர்கள் நானும் என் ஆவலை நாகரிகம் கருதி கேட்கவில்லை ...ஆவல் புரிந்து கேக்காமலே வரம் தந்த ஐயாவுக்கு நன்றி நன்றி !

      இப்ப கவிதைக்கு வரேன் ... சகோ எழில் அவர்கள் சொன்னது போல் இது எழுத்தாளர்களுக்கே உள்ள தைரியம் தான் ஆனால் இன்றைய எழுத்தாளர் பலருக்கு இல்லாத தைரியம் ...அருமை அருமை ...

      கவிதைக்கு அழகு மிகை (கூட்டியும் குறைத்தும் கூறலாம்) நீங்கள் இங்கே மிக அழகாக நகைச்சுவை உணர்வுடன் (வஞ்ச புகழ்ச்சி என்றும் சொல்லாம் )நறுக் கென்று சொல்லி கைதட்டல் வாங்கி அசத்தி விட்டீர்கள் ஐயா .... இது ஒரு பாடம் எனக்கு

      இங்கே பகிர்ந்து மகிழ்வித்த ஐயாவுக்கு நன்றி நன்றி

      Delete
  13. வேதனைகளையும், வலிகளையும் இயல்பாக எடுத்துச் சென்றது கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ...தொடர்ந்து வாங்க ..சிறகுகள் தாங்க உங்களை போல நானும் உயர பறக்கணும்

      Delete
  14. மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete