7.17.2012

இன்று எனக்கு மரணம் தற்கொலை


இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை 


பகலா இரவா தெரியவில்லை 
வீடா மருத்துவமனையா புரியவில்லை 
உடலுடன் உயிருக்கு இன்று என்ன கோபமோ 
முற்றிலும் பிரிவதற்கு தயாராகி விட்டது .

யார் யாரோ என் உணர்வற்ற கைகளோடு 
நேசமாய் இருக்க நிஜமாய் மன்னிப்பு கேட்ககூட 
முடியாமல் குரல் இழந்து நான்.
மொழியின் வலிமை புரிகிறது 
சிந்தையின் முடிவுரை சத்யசோதனையாய் விரிகிறது!

சூடான செய்தி தரும் செய்தித்தாள் கூடமறுநாள் 
சுவையான சாப்பாட்டிற்கும்  பொட்டலமாய் பயன்தரும் 
என் உடம்பின் சூடு ஆறும் முன்பே 
பயனற்று கிடக்குறேனே படுக்கையிலே!

நாடி அடங்கும் வேளையிலே 
ஆடி தள்ளுபடி கூட்டம் போல 
வந்து போகும் மக்கள் கண்டு 
நான் நல்லவனோ என்ற சந்தேகம் 

பொய்யுறைத்த கணங்கள் 
நண்பரின் மனமுடைத்த ஞாபகங்கள் 
வியாபாரத்தில் பதுக்கிய நாட்கள் 
நினைவலையில் தடுமாறிய பொழுதுகள் 
அத்தனையும் வர மீண்டும் சந்தேகம் 
எனக்கு சொர்க்கமா நரகமா?


சாதித்த வேளையிலே கைதட்டியோர் உண்டு 
சோதித்த பொது முகம் திருப்பியோரும் உண்டு 
போதித்தபடி  என் துணைநின்ற மனைவிக்கு 
இன்று போல் கண்ணீர் பலநாட்கள் என்னால்!
நான் பொய் அதிகம் உறைத்தது உன்னிடமே 
அவை அறிந்தும் அறியாமல் ஆதரித்தாய் 

தோழியாய் இன்றுவரை தொடர்ந்தவளே
இனி துரோகியாய் நான் இருக்கமாட்டேன்
விடைபெறும் நேரத்தில் உன் அழுகுரல் 
இசையாய் கேட்கயிலே முத்தமிட 
ஆவல் பொங்குதடி இது 
காதலா காமமா ?

இறைவா இன்று வலுக்கிறது வலி 
காட்சிகள் தர மறுக்கிறது விழி 
வலுவிழந்தபோது நாடினேன் உன் வழி!
பரிட்ச்சைக்கும் சிகிச்சைக்கும் 
இப்படியே நான் பழகிவிட்டேன்.

உன்னை கண்களால் கண்டிருந்தாலும் 
என் உள்ளம் இவ்வாறே இயங்கிருக்கும்.
நன்றி சொன்ன நிமிடங்களை விட 
உன்னை மறந்த தருணங்களே அதிகம்!
யாதுமானவனே இன்று 
ஏதுமில்லாமல் கேக்கிறேன் மன்னிப்பாயா!!

இறுதியாய் நான் திட்டிதீர்த்த பேரனின்
முகம் தேடி தோற்குது விழிகள் !
இமைக்க மறுக்கும் இமைகளில்
எனக்கு பிடித்த கருமை நிறம்
நிரம்பி நிற்கையிலே !

கருணை கொலை விவாதங்கள் ஓய்ந்து 
நான் விரும்பி அருந்தும் குவளையிலே 
என் மூச்சடைக்க பால் 
மீண்டும் மழலை போல 
புரிந்தும் புரியாமல் வாய் திறக்கிறேன் .
இது கொலையா தற்கொலையா ?

கேள்விகள் இன்றி வந்த நான்
கேள்விகளோடு விடைபெறுகிறேன் 
விடை தேடும் ஆசை மட்டும் 
துணையாய் இன்றும் என்னுடன் .

-முற்றும் 

எங்கோ படித்த மாதிரி இருக்கா ..ஆமாம் இது ஒரு மீள்பதிவு ..நன்றி 

4 comments:

 1. படித்துக் கொண்டே போகையில்
  என் இருப்பு சூழல் அத்தனையும்
  ஒவ்வொன்றாய் என்னை விட்டு விலக்
  நானே படுக்கையில் கிடப்பதாய்
  நானே பிதற்றிக் கொண்டிருப்பதாய்
  உணர்ந்தேன்
  உயிரை உலுக்கிப் போகும்
  உன்னதப் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ..
   இது மீள் பதிவு சகோ
   சென்ற முறை என்ன கருத்து சொன்னீர்களோ அதையே மீண்டும் கூறி
   என்னை ஆச்சிரிய பட வைத்து விட்டர்கள் நன்றி நன்றி நன்றி

   Delete