12.10.2012

வெள்ளை மாளிகையும் முதலாளியின் தற்கொலையும்!!!


என் வயது தான் உனக்கும்
நீ எனக்கு முதலாளி
நான் தொழிலாளி.

நிரம்பி வழியும் கல்லாபெட்டியின்
இலட்ச்சங்களை கூட அலட்சியமாக
கடந்து செல்கிறாய் முதலாளியின் மும்முரத்துடன் !
கல்லாபெட்டி என் பொறுப்பில்,முனங்கல்களுடன் !

என் லட்சியங்களை உன் லட்சங்களுடன்
அடைந்திடவே தடுமாறியது மனம்!
உன் நம்பிக்கை எனக்கு நம்பிக்கையளித்ததால்
தடம்மாறினேன் நான் தவிப்புகளுடன் !

ஆண்டுகள் செல்ல செல்ல, இதோ
என் வீட்டுக்கு வெள்ளை அடிக்கிறார்கள்!
உறவினர்கள், வெள்ளை மாளிகை
என்று கைதட்ட தட்ட என்
குற்ற உணர்வுகள் தவிடுபொடியாயின !

விடுமுறையில் வீட்டை பார்க்க போகிறேன்
நதிமூலம் ரிஷிமூலம் என்ற வியாக்கியானங்கள் உதவிசெய்ய,
உறவினர்கள் முன் பெருமை தலைக்கு ஏறி 
பலருக்கு நாட்டாமையாக நான் !

நாட்டமை சொம்பை பாதுகாத்தவனாக
விடுமுறை முடிந்து வேலைக்கு
திரும்பிய நாள், நீ (முதலாளி ) தற்கொலை
செய்துகொண்டு பிணமாக கிடக்கிறாய் !
என்னை மரணத்திலும் முந்திவிட்டாய்!
இன்று மட்டும் பொறாமை இல்லை !


உன் அலட்சியத்தை கண்கொட்ட பார்த்த நான்
உன் நம்பிக்கையை, கண்மூடி பார்த்தது புரிந்தது!
உன் தொழில் தொங்கவும் இன்று
தலை தொங்கவும் நானும் ஒரு காரணம்!
இல்லை !நான் மட்டுமே காரணம் !
புண்பட்ட என் மனதில் ஈட்டியாக பாய்ந்தது
உன் வீட்டார் மீண்டும் என்னை நம்பி
பொறுப்பு அனைத்தையும் தந்தது !

வெற்றிகளை ருசித்த பின் மனம் 
கற்றுக்கொள்ள் துணிவதே இல்லை!
அந்தரத்தில் நீ தொங்கி - என் 
வெற்றிகளையும் கொன்றுவிட்டதால் 
கற்க தொடங்கினேன் மாணவனாக !

உன் மனைவி மறுமணமே வேண்டாம் என்கிறாள்
அவ்வளவு காதலிலும்  முதலீடு செய்திருக்கிறாய் நீ!
நான் மனிதனாக நேர்வழியை நேசிக்கவும் 
கற்றுக்கொண்டேன் உன்னால் !


தொழிலை தலைநிமிர்த்த  பாடுபட்டேன்,
என் சேமிப்பை சத்தமின்றி கொட்டினேன் ,
நான் சில காலம் சம்பளமும் துறந்தேன்.
இவை அனைத்தும் உன் உழைப்பே !
அதை நான் மட்டும் அறிவேன் !


பின்பு ஒரு நாள் வெற்றிக்கு பரிசாக 
உன் திருமதி எனக்கு வெகுமதி தந்தாள்,
வேண்டாம் என்றேன்,கணக்கு தீர்க்க வழியில்லாமல் !
திருடிய போது திருத்தாத உறவுகள் ,
இன்று என்னை ஏமாளி என்று ஏளனம் செய்தனர்!

நீ என்னை மன்னிக்காதவரை
என் நன்மைகளில் உனக்கும்
பங்கு உண்டாம் ,அதற்காகவே
அதிகமாக நன்மைகள் செய்கிறேன்
இருவரும் மோட்சம் பெற !


ஒருமுறை மரணித்து விட்டு
என்னை ஓராயிரம் முறை கொன்றவனே ,
உன்னை சந்திக்கும் நாளில்
என் தலை குனிந்தே இருக்கும்,
நாக்கை தொங்கவிட்டுவிட்ட உனக்கு
என்னை திட்டிதீர்க்க வலு இருக்குமா?


6 comments:

  1. அருமையான கவிதை
    தேர்தெடுத்த வார்த்தைகள்,
    வழிகாட்ட ,வாழ்க்கையின்
    வடிவம் வலுப்பெறுகிறது

    துரோகம் கூட
    நலியாத நம்பிக்கையால்
    தூய்மையாகிறது.

    நல்ல பதிவு நண்பா.......

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி நண்பா

      Delete
  2. நண்பரே...உங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .. இது வலைசரத்தில் எனக்கு ஆறாவது அறிமுகம். தொடர்ந்து எழுத ஊக்கமளித்த நண்பனுக்கு மிக்க நன்றி ....

      Delete
  3. வலைச்சரத்தின் மூலம் உங்கள் கவிதை படித்தேன் . துரோகத்தைக்கூட இவ்வளவி அழகான கவிதையாக்க முடியுமா? அதற்காகவே அதிகமாக நன்மைகள் செய்கிறேன் அழகாகச் செதுக்கப்பட்ட வரிகள்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .. முதல் வருகை .. தொடந்து வாங்க ..

      Delete